Thursday, September 11, 2014

ஜோர்ஜ் லூயி போர்ஹே’வின் “ஒரு வேண்டுதல்”

ஒரு வேண்டுதல்



என்னில் ஒரு பகுதியாகிப்போன இரு மொழிகளிலும், ஆயிரமாயிரம் தடவைகள், எனது உதடுகள் உச்சரித்த, உச்சரித்தபடியே இருக்கப் போகும், பிரபுவின் வேண்டுதலை இதுவரையிலும் நான் பகுதி மட்டுமே புரிந்து வைத்திருக்கிறேன். இந்தக் காலை – ஜூலை 1, 1969 - மரபார்ந்ததாக இல்லாத என்னுடைய தனிப்பட்ட வேண்டுதல் ஒன்றை முயற்சித்துப் பார்க்க விரும்புகிறேன். அப்படியொரு செய்கை மனிதத்திற்கும் மேலானதொரு அர்ப்பணிப்பை கோருவதென எனக்குத் தெரியும்.  எல்லாவற்றிற்கும் முதலில், வெளிப்படையாகவே நான் எதையும் கேட்பதற்கு தடை செய்யப்பட்டவன். எனது கண்களில் இரவு நிரப்பப்படாமல் இருக்க வேண்டுமென கேட்பது பைத்தியக்காரத்தனமானதாக இருக்கும்; ஆயிரக்கணக்கான மக்கள் பார்க்கக் கூடியவர்களாக இருந்தும் நியாயமற்றவர்களாக, அறிவற்றவர்களாக குறிப்பாக மகிழ்ச்சியற்றவர்களாக இருப்பதை நான் அறிந்தேயிருக்கிறேன். காலத்தின் அணிவகுப்பு காரண காரியங்களாலான ஒரு வலை, எவ்வளவு சிறியதாக இருப்பினும் கருணையின் அன்பளிப்பைக் கேட்பது அந்த இரும்பாலான வலையின் ஒரு கண்ணி உடைபடவேண்டுமென கேட்பதே, கேட்பின் அது ஏற்கனவே உடைந்ததாயிருக்கும். யாரொருவரும் அப்படியொரு அற்புதத்திற்கு பொருத்தமானவரில்லை. அல்லது என்னுடைய அத்துமீறல்கள் மன்னிக்கப்பட வேண்ட முடியுமா; மன்னித்தல் இன்னொருவரின் செயல், நான் மட்டுமே என்னைக் காக்க முடியும். மன்னித்தல் பாதிக்கப்பட்டவரையே தூய்மைப்படுத்தும் மேம்போக்காகக் கூட அதனால் தீண்டப்படாமல் போகும் பாதிப்பை உண்டாக்கியவரை அல்ல. எனது ”சுதந்திர விருப்புறுதி”யின் சுதந்திரத்தன்மை ஒருவேளை மாயத்தோற்றமாக இருக்கலாம் என்றாலும் என்னால் கொடுத்துக்கொள்ள முடியும் அல்லது கொடுப்பதாக கனவு காண முடியும். என் வசமில்லாத தைரியத்தை என்னால் வழங்க முடியும்; என்னுள் பொதிந்திராத நம்பிக்கையை என்னால் வழங்க முடியும்; கணநேரத்தோற்ற அளவிலாவது அல்லது நான் அறிந்தேயிராத கற்பதற்கான ஒரு விருப்பத்தை கற்றுக் கொடுக்க முடியும்.  நண்பனாக நினைவு கூறப்படுவதற்கும் குறைவாகவே ஒரு கவிஞனாக நினைவு கூறப்பட விரும்புகிறேன்; எவரோ ஒருவர் டன்பார் அல்லது ஃபிராஸ்டிலிருந்து ஒரு துடிப்பொலியை ஒப்பிப்பதை அல்லது நள்ளிரவில் குருதிகசியும் அந்த மரத்தை, சிலுவையை நோக்கும் அந்த மனிதன், என்னுடைய உதட்டிலிருந்து முதன்முறையாக அவன் கேட்கும் சொற்களை பிரதிபலிப்பதை விரும்புகிறேன். வெறெதுவும் பொருட்டில்லாத எனக்கு, மறதி தாமதத்தை நீட்டிக்காது என நம்புகிறேன்.  அண்டத்தின் வடிவமைப்பு நாம் அறியாதது எனினும் உள்ளத்தெளிவோடு சிந்திப்பது மற்றும் நேர்மையுடன் செயலாற்றுவது அந்த வடிவமைப்புகளுக்கு (இனி ஒருபோதும் நமக்கு வெளிப்படுத்தப்படாதவை) உதவி புரிவதற்கே என்பதை அறிவோம்.

நான் முழுமையாக மரணிக்க விரும்புகிறேன்; என்னுடைய துணையான இந்த உடலுடனே நான் மரணிக்க விரும்புகிறேன்

Wednesday, September 10, 2014

கனவு மிருகம் - தொகுப்பிற்கு க. வை. பழனிசாமி அவர்கள் வாசித்த விமர்சனம்



சிறுகதைகள் மனதின் வடிவங்கள்தான். சொற்களில் சிக்கவொண்ணாதவை. தனக்கே மறந்துபோன மூலப் பிரதியை படைப்பாளி என்னிடம் எதிர்பார்க்கமாட்டார் என்ற நம்பிக்கையோடு இந்தக் கட்டுரையை வாசிக்கிறேன்.

 மனித வாழ்க்கை ஒருபோதும் தனித்து இல்லை. தான் அல்லாத பிறவற்றோடு அவளோ அவனோ கொள்கிற உறவின் விரிவே வாழ்தல். மலையோ, மனிதர்களோ, கடலோ, வானமோ, மதுவோ, பறவையோ எல்லாமும்தான் உறவுகொள்கின்றன. வாழ்தலில் பெறுகிற அனுபவம் ஒவ்வொருவருக்கும் வேறு வேறு. 'நானும் நான் அல்லாத பிறவும்' என்பதுதான் அடிப்படையான இரு நிலைகள். ஒருவன் தான் அல்லாத பிறவற்றோடு கலந்து பெறுகின்ற அனுபவத்தை... அனுபவத்தின் விளைவாக எழுகின்ற எண்ணற்ற உணர்வுகளின் பிம்பங்களை... உயிர்கண்டு அதிரவிட சாத்தியமான வழிகளைத் தேடுகிறான். அப்படியான உள்மன நிகழ்வுகளைப் பொய்யில்லாது வெளிப்படுத்தவே கலையின் உதவியை நாடுகிறான். உணர்வின் பன்முகத்தன்மையை ரூப வடிவில் பார்க்கும் அதிசயத்தை கலை, இலக்கியம் இரண்டிலும் காண முடிகிறது.

 இலக்கியத்தின் மீதான வசீகரம் அதன் உருமாற்றம்தான். மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் கலாமுகம் என்று இலக்கியத்தைச் சுட்டலாம். அது எப்போதும் தன்னைப் புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது. வளர்சிதை மாற்றம்தான் உடலின் மூல வினை. மெட்டபாலிசம் என்ற வினை இல்லை என்றால் அந்த உடல் செத்துவிட்டது என்று பொருள். செல்கள் அழிவதும் செல்கள் புதிதாகப் பிறப்பதும் உடலுக்குள் நடக்கும் தொடர் வினை. இதில் மரபணு முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதையும் மறந்துவிடக் கூடாது. இலக்கியத்திலும் இதுபோல நடக்கிறது. அதனால்தான் இலக்கியம் உயிரோடும் புதிதாகவும் இருக்கிறது. பாலசுப்ரமணியன் அவர்களின் எழுத்தை இப்படியான இடமிருந்தே பார்க்கிறேன்

வகை மாதிரிகளில் இதுவரை வந்துள்ள சிறுகதைத் தொகுப்புகளில் பாலசுப்ரமணியனின் 'கனவு மிருகம்' தனித்தும் வடிவ ஒழுங்கோடும் இருக்கிறது.
ஒவ்வொரு கதையும் தனித்தும் அதே நேரத்தில் தொகுப்பில் இணைந்துமிருப்பது ஆச்சரியம்தான்.
'கனவு மிருகத்தின்' மொழி நடையைக் கொஞ்சமும் காட்டாது 'சந்தன எண்னை' சிறுகதையில் வேறு மொழியைப் பார்க்க முடிகிறது.
சிறுகதைகள் புத்தக வாசிப்பின்போது நேற்றல்லாத ஒரு சலனத்தை ஏற்படுத்த வேண்டும்.
அந்த அதிர்வு நிகழ் உலகின்மீதும் நமக்கு ஒரு சலனத்தை உண்டாக்கிக்காட்டும்.
மனம் எழுதிப்பார்க்கும் நூறு சிறுகதைகள் அப்படியான ஒரு கதைக்காவே முயல்கிறது.
காத்திருந்தால் மட்டுமே கிட்டும் கனி அது. அப்படியான இடத்திற்கு போட்டியிடும் கதைகள் கொண்ட தொகுப்பு இது.

ஒவ்வொரு வாசிப்பிலும் ஒரு படைப்பு புதிப்பிக்கப்படுவதாகத்தான் தோன்றுகிறது
படைப்பாளியின் அனுபவமும் வாசக அனுபவமும் சங்கமிக்கிற அபூர்வ தருணம் வாசிப்பு.
முடிவுறாத உருவோ என்றுகூட நேர்மையான ஒவ்வொரு படைப்பையும் சொல்லத் தொன்றுகிறது.
ஒவ்வொரு வாசகத் தீண்டலிலும் புத்துருகொள்ளக் காத்திருக்கும் படைப்பே நல்ல எழுத்து.
வாசிக்கும்போதுதான் உண்மையில் ஒரு புத்தகத்திற்கு உயிர் வருகிறது.
ஆனால் இப்படிச் சொல்வது எல்லாப் புத்தகங்களுக்கும் பொருந்தாது.
தூய படைப்பும் அக்கறையான வாசிப்பும் இணைய வேண்டும்.
அப்படியான வாசிப்பை இவரது 'ஆப்பிள்' கதையில் உணரமுடிந்தது.

 பெரியவர்கள் எப்போதும் பெரியவர்களாகவே இருக்கிறார்கள். சிறுவர்களோடு இருக்கும்போதுகூட.
குழந்தைகளின் உலகை அறியாதவர்கள் குழந்தைகளுக்குக் கொடுக்க என்ன வைத்திருக்க முடியும்?
குழந்தைமையை தொலைத்தவர்கள் வாழும் சமூகம் தூயதாக இருக்க வாய்ப்பே இல்லை.
குழந்தைகளோடு நெருக்கம்கொள்ளாத மனம் பார்வையற்றதாகத்தான் இருக்கும்.
குழந்தைகளிடம் பிரக்ஞை பூர்வமான ஒழுக்கம் இருப்பதில்லை.
ஒழுக்கம் அவர்களிடம் இயல்பிலேயே இருப்பது.
கதையை வாசித்தபின்பு கதைக்குள் நிறையும் ஆர்த்தி மனதை கலைத்துப்போட்டுவிடுகிறாள்.
குழந்தையின் கடியில் வாயில் திறந்த ஆப்பிளை நெருங்குகின்றன எறும்புகள்.

கிறுக்கள் சித்திரங்கள் எனக்கு நெருக்கமான வாசிப்பைக் கொடுத்தது. குழந்தைகள் எப்போதும் அவர்கள் உலகத்திதான் வாழ்கிறார்கள். அவர்களை நமது உலகத்திற்கு அழைத்து வர முயல்வது எவ்வளவு பெரிய கொடுமை. கிரையான்கள்... வரைவதற்கு சுவர்...  உள்ளே குவியும் பிம்பங்கள் என்று வாழ்கிற அவர்களை ந்மது உலகிலிருந்து பார்ப்பதே நிகழ்கிறது.

குழந்தைகள் வார்த்தைகளை நம்புவதில்லை. தாங்கள் வரையும் கோடுகளைத்தான் நம்புகிறார்கள். வீட்டின் சுவர்களைத் தமது உலகமாக்குகிறது குழந்தை. கிறுக்கள்களின் வண்ணம் இன்னொரு பிரபஞ்ச அழகில் சுடர்கிறது.

பெரியவர்கள் குழந்தைகளைப்போல சுவற்றில் கிறுக்கினால்.... கணநேரம்கூட காண முடியாது. பார்க்கும் நம் மனம் தாங்காது. இப்படியான அவஸ்தையை கிறுக்கள் கதையை வாசித்தால் உணரமுடியும். குழந்தைகள் வாழும் வீடு வேறு பிரபஞ்சத்திலிருக்கும் வீடு. பெரியவர்களுக்கு இது புரிவதே இல்லை. பாவம் குழந்தைகள். 'பாப்பாவிற்கு கால் வலிக்கிறது' என்ற என் கவிதை நினைவில் வந்தது.

''கனவு மிருகம்'' கதையை வாசிக்கும்போது பிரக்ஞையில் பிடிபடும் காண்டா மிருகம் வேறு வகையானது.
கனவிலிருந்து வெளியேறி நினைவின் விழிப்பிலும் பின் தொடரும் மிருகத்தை அறிந்துகொள்ள முயலும்போது அந்த மிருகம் தர்க்கத்தின் திறப்புகளற்ற கதவுகளுக்கு வெளியே கனவின் ஈரத்தோடு நின்றிருப்பதைப் பார்க்கிறோம்.
1959 ல் லிளிழிணிஷிசிளிஷிஎழுதிய ஸிலீவீஸீஷீநீமீக்ஷீஷீs நாடகத்தில் வருவது போன்ற காண்டா மிருகம் ஏனோ நினைவில் வந்தது.
யூதர்களுக்கு எதிராகக் கிளம்பியபோது மக்கள் ஹிட்லர் திணிக்கும் மாற்றத்திற்கு பழகிப்போகிறார்கள்.
குற்ற உணர்வு அற்று பின் தொடர்கிறார்கள். எல்லோரும் ரினோசாரஸாக மாறிப்போவதாகக் காட்டும் நாடகம் மிகவும் பிரபலமானது.
இந்த நாடகப் பிரத்யோடு இந்தக் கதை எனது வாசிப்பில் பொருந்துவதைத் தடுக்க முடியவில்லை.
கீழ்க்கண்ட சில வரிகள் எனக்கு அப்படியான வாசிப்பைத் தந்தன.

''விழித்துக்கொண்டபின் நீளமான இரவொன்றில் ஒற்றைக்கொம்புள்ள காண்டா மிருகத்தை அவன் கனவில் கண்டான்''

''கனவிலிருந்து தப்பிய காண்டாமிருகம் அவனுடைய மனதின் எட்டுத் திசைகளிலும் திரியத் துவங்கியது.''

''அது மனிதர்களுக்கும் வாகனங்களுக்கும் நடுவே சாம்பல் நிற உடலைத் தூக்கிகொண்டு இவனறிய மட்டுமே நடந்தது.''

எல்லோரும் நாளை எதையோ ஏற்றுக்கொண்டு மனிதர்கள் ரினோசாரஸாக மாறிவிடும் அச்சமே கனவின் உருவாக இவனை நினைவில் துறத்துவதாகத் தோன்றியது. கனவில் கண்ட மிருகத்தின்மீதான பொருள்கோடலுக்கு அவன் சந்திக்கிற மூவரும் உதவவில்லை என்றே தோன்றியது. நீஷீறீறீமீநீtவீஸ்மீ ஜீsலீஹ்நீஷீறீஷீரீஹ் யின் உருவமாகவே காண்டா மிருகம் தோன்றுகிறது

'இருள் திரவம்' இந்தக் கதையைபின்னும் சரடு எது?

கதையை மனம் மீண்டும் படித்துச் சில சொற்களை வேகமாக சேகரித்தன.
சவப்பெட்டி.... தகவல்கள்... ஃபேசியல்.... இருள்.... லிப்ட்...... உளரல் இப்படி நிறையச் சொற்கள் வரிசையில் நின்றன.
இறுதியில்.............. இருள், தகவல்கள் என இரண்டு சொற்கள்.
முடிவில் இரண்டும் கலந்து இருள் திரவத்தில் கதையை வாசித்துக்கொண்டிருந்தேன்.


கொஞ்ச நேர கண்மூடல். சில நிமிடங்களைக் கூட கடக்க முடியவில்லை.
தகவல்கள் நிரம்பிய மனதில் ஓடும் எண்ணங்கள் படுத்தும்பாடு தாங்காது தவிக்கிறான்.
மேலுமான தகவல்களுக்கு ஏங்கும் மனது.
கொட்டும் தகவல்கள்..... கொஞ்சம் ஏமாந்தால் ஆளையே அடித்துக்கொண்டுபோகும் இன்டெர்னெட் யுகம்.
''எல்லாமே சவப்பெட்டியா மாறிக்கிட்டிடுருக்கு. அதுவும் உயிரோட வச்சு புதைக்கிற சவப்பெட்டி'' கதையின் ஆரம்பத்திலும் முடிவிலும் இந்த இரு வரிகள் வருகின்றன.
செயல் படாத உயிர்..... செயல்படாத எண்ணம்.
எனது உடலின் விளிம்பு சவப்பெட்டியாகமாறியது வாசிப்பின் முடிவில்.
பாலசுரமணியத்தாலும் மீட்க முடியாது.
நாம் எல்லோரும் அதற்குள்தானே இருக்கிறோம்.

படைப்பாளியின் அனுபவம் சும்மா இருப்பதில்லை. மனதை சதா கீறி உழுது சுயமான விதைகளைத் தூவித் தூவி புதுப்பது விளைச்சல்களைக் கண்டுகொண்டே இருக்கிறது. இப்படியான இடமிருந்து எழுதுகிறவர்கள் அரிதினும் அரிது. முதல் இரண்டு கதைகளையும் வாசித்து முடித்ததும் நான் எப்போதும் விரும்பாத பிரமிப்பை அடைந்துவிட்டேன். மீதிக் கதைகளைப் படிக்காமல் விட்டு விடலாமா? மனசாட்சி உருத்தவே எல்லாக் கதைகளையும் படித்துவிட்டேன். வாசிப்பு முடிந்ததும் நினைத்தேன். ஒரு தொகுப்பில் இப்படி பன்முகப் பரிமாணத்தில் கதைகள் இருக்க முடியுமா?

 எப்படியான பயணம் என்பது முக்கியம். எண்ணத்தின் திறன் சார்ந்ததே பயணம்.
மன உள்ளே வியக்கவைக்கும் பயணங்கள்.
நீச்சல் முற்றிலும் வேறான கதை.
''ஒற்றைக்கால் படியிலிருக்க மறுகாலை மாயக்கரங்கள்கொண்டு இழுத்த நீர்'' இப்படி மயக்க பல வரிகள். கவிதை பரிட்சயம் உள்ள சிலர் இப்படி எழுதிவிடுவார்கள்.
கிணற்றில் நீச்சல் பழகும் அண்ணன்.... வேறு ஒரு கிணற்றின் சற்றுச் சுவரில் பூக்கள் பறிக்கும் தங்கை.
நீரை வெல்லத் துடிக்கும் ஒரு உடல்.
இருப்பிடம் உணராது வசீகரத்தில் படியும் இன்னொரு உடல்.
இரு வேறு இடங்களின் நிகழ்வுகள்மீதான விவரணை.
வாசிப்பில் மனம் நடுங்குகிறது
Juxtapositoin என்று சொல்லுவார்கள். அப்படியொரு இடம்.
மனது வலிக்கும் இடம்தான். ஆனால் கதை அதன் வடிவில் ஒளிர்கிறது.
கனவு மிருகம் கதையை இதோடு ஒப்பிட முடியுமா?
இதைத்தான் சொல்ல வரிகிறேன். வகை மாதிரியில் இவர் வென்றுவிடுகிறார். வடிவத்திலும் உள்ளடகத்திலும் கொஞ்சமும் ஒழுங்கு சிதையாது.

கேன்வாஸ்பரப்பில் காத்திருக்கும் ஓவியம் முழுமையானதல்ல. அது எப்போதும் பார்வையாளரின் தீண்டலுக்குக் காத்திருக்கிறது. படைப்பும் பார்வைகொள்பவரும் சந்திக்கும் இடத்தில் காண்பவரின் மன அடுக்குகளில் பயணிக்கிறது படைப்பு. அப்போது நடக்கும் மனவினையே கலையின் ஆதாரம். படைப்பாளியின் அக்கறை குறித்தே எல்லோரும் பேசுகிறோம். காண்பவரின் அக்கறையும் அதற்கு இணையானது. எல்லோரும் சேர்ந்து ஆற்றும் கலா வினையே நல்ல படைப்பை உருவாக்குகிறது. அப்படியான வாசிப்பைக் கோரும் கதை 'கொலையும் மூன்று உரையாடல்களும்.

எதுவும் நமக்கு நிகழாதவரை எல்லாமும் செய்தியாகவும் பேச்சாகவும் வினையாடி முடிகின்றன. இந்தக் கதைக்கு கொலைக்கு பதிலாக குஜராத் கலவரம்போல.... இலங்கையில் நடந்த ரீமீஸீஷீsவீபீமீ போல தூரத்தில் நடந்தாலும் இந்த உரையாடல்கள் பொருந்தும். இந்தச் சிறுகதையின் அதிர்வு வரலாற்றில் மனிதனின் மெனத்தை உரக்கப் பேசுகிறது.


திருமணம் ஆகாத.... திருமணத்தைத் தள்ளிப்போடுகிற... உடல்ரீதியாக பிறர் பார்ப்பவளாக வரும் பார்கவி அப்படியொன்றும் கவலையில் மூழ்கிக்கிடக்கவில்லை.
சந்தன எண்ணை சிறுகதையில் பெண்மீதான ஆணின் பார்வையை கண்ணாடிபோல பிரதிபலித்து பார்கவி கடந்துபோகும் லாவகம் புதிதாக இருக்கிறது.
ஆனால் மனம் எல்லா நேரமும் ஒரே மாதிரி இருப்பதில்லை.
ஒரு முடிவை காலம் கடந்து எடுத்துபின்பு அது சும்மா இருப்பதில்லை.
பார்கவியின் வெவ்வேறு நிலைகள் பெண்மையின் ஒரு அடையாளமாக அந்தந்த நேரங்களில் வந்துபோவதாகவே படுகிறது.
வேணுகோபால்கூட அந்த நேரமட்டுமே வந்துபோகும் ஒரு ஆணாகத்தான் தோற்றம்கொள்கிறான்.
இப்படியான வாசிப்பையே அந்தக் கதையில் என் மனம் விரும்பியது.

'முள்' கதை மரணத்தை.... தற்கத்திற்கும் வெளியே பார்க்கிறது. இதுவரை அறியபட்ட இடங்களிலிருந்து பார்க்க மறுக்கிறது. விபத்து. விபத்தில் ஏற்படும் மரணம். மரணித்த மனிதன்மீதான விபரங்கள். எல்லாமும் தாண்டி கதையின் வெளிச்சம் அந்த வீட்டிலிருக்கும் விதவையின் மீது விழுகிறது. ஆண்மகன் உள்ளே நுழையும்போது வெளியில் வந்து நிற்கும் பெண்ணோடு மரணத்தைப் பேசுகிறது கதை.

வாழ்தல் என்பதே ஒரு பயணமாகத்தான் படுகிறது. எல்லா நேரமும் பயணத்தில் இருக்கிறோம். உள்ளே வெளியே என்று பயணம் தொடர்கிறதுவெளி திணித்த அனுபவங்கள் மீது நடக்கின்றன மனதின் கால்கள். தூங்கும்போதும் வாசிக்கும்போதும் மேஜையில் அமர்ந்து உண்ணும்போதும் நடப்பதை நிறுத்துவதே இல்லை. எதையோ அடைய, எதையோ பார்த்துவிட, பிறகு பார்த்தது சலித்து, அடைந்தது துறந்து, மீண்டும் நம்பிக்கை வளர்த்து  நடப்பது தொடர்கிறது. இது பாலசுரமணியத்துக்கும் பொருந்தும் நமக்கும் பொருந்தும்.

பயண தூரம் தெரியாமலேயே பயணத்தில் இருக்கிறோம். உள்ளேயும் வெளியேயும் புதுப்புது இடங்கள்மீது பார்வைகொள்கிறோம். வலியும் பரவசமும் மாறிமாறி வருகிறது. உணர்வின் பன்முகத் தீண்டல். எல்லாமும் அரூப அனுபவங்கள். பயண வழியில் மனத்தில் நிலைத்துவிட்ட உணர்வுகளை வடிவமாக்கிப் பார்க்கும் முயற்சியே சிறுகதைகள். பாலசுரமணியத்தின் உள்ளேயும் வெளியேயும் நடந்த பயணங்களின் வெளிப்பாடுகளே அவரது சிறுகதைகள். ஆப்பிள்... சந்தன எண்ணை.... காணாமல் போயிருந்தவனின் கதை... கிறுக்கல் சித்திரங்கள் இப்படி எல்லாக் கதைகளிலும் ஒரு பயணம் இருக்கிறது. படைப்பாளியின் எண்ணம் கூட்டிச் சென்று நிறுத்தி பார்வைகொள்ள வைத்த இடங்கள். வாசிப்பில் புதிதாகத் தோன்றுவதற்கான காரணமும் அஃதேஒரு புத்தகம் அதற்காகத்தான் வாசிகப்படுகிறது. வாசகனை ஏமாற்றாத எழுத்து. தனித்த எழுத்து இவரின் எழுத்து.