Saturday, December 29, 2012

பாதரசம் வெளியீடாக வரவிருக்கும் சிறுகதை தொகுப்பான “கனவு மிருகம்” முன்னுரை :



                                                          

     பொய் சொல்வதில் இருந்துதான் கதை சொல்வதும் வந்திருக்க வேண்டும்.  கதைகளும் பொய் சொல்வதே போன்று உண்மையைச் சொல்வதாய் அமைவதால் புனைவென்கிறோம்.  உண்மையைப் புனைதல். உண்மை என்பதே கூட இல்லாமலும், சார்புடையதாகவும், பல உண்மைகளாகவும் இருக்கும் பட்சத்தில் புனைவுகளும் பலவாறாக உள்ளன.

     நேர்ச் சந்திப்புகளில் சுந்தர ராமசாமி எழுத்தாளனாக வேண்டுமென்பது ஒரு Passion எனவும், நாஞ்சில் நாடன் “என்னிடமும் சொல்வதற்கு கதைகள் உண்டு என நம்பவேண்டும்” என்றனர்.  கதைகள்தான் அவர்களிடம் சில கேள்விகளைக் கேட்கத் தூண்டியவை. மேலும் சிலர். பலவாறான விளக்கங்கள் சொல்லப்பட்டாலும் புனைவும் உரைநடையும் மொழியின் வழி சில சாத்தியங்களை செய்துபார்ப்பதே. அது கவிதை போல் மொழியின் சாத்தியமாக இன்றி மொழியை ஒரு கருவியாகக் கொண்டு வேறொன்றைச் சாத்தியமாக்குவது.  புனைவு மொழியிடமிருந்து கடன் பெறுகிறது. இப்படிக் கொண்டால் புனைவிற்கு மொழி இரண்டாம் பட்சம்தான். கவிதையும் மொழியும் இணைவதைப் போல புனைவில் ஒரு இணைவு உண்டாக வேண்டியதில்லை.  வெறும் மொழியால் கதைகளை உருவாக்க முடிவதில்லை. அதன் உதவிகொண்டு சிலதைப் புனைய வேண்டியுள்ளது.

     இலக்கியம் என்ற ஒன்று தோன்றி, ஒப்புக்கொள்ளப்பட்ட நாளிலிருந்து அதன் வடிவம் சார்ந்து நிகழ்ந்த மாற்றங்களே நம்மிடம் சிறுகதைகளாகவும், நாவல்களாகவும் நிலைத்திருக்கின்றன. நாவல்கள் எழுதப்பட்ட பின்புதான் சிறுகதைகள் தோன்றின.  விரிவான ஒரு வடிவத்தை முயன்ற பிறகு பரப்பில் சிறியதான கதைகள் வழி ஒரு சிமிழுக்குள் வெய்யிலை அடைப்பது போன்ற முயற்சியாக சிறுகதைகள் நம்மிடம் உலவுகின்றன. 

கதைகள் சொல்லப்பட ஆரம்பித்த போதிலிருந்தே யதார்த்தமாக இல்லை.  யதார்த்தம் என்பதுதான் கதை சொல்லலில் கடைசியில் வந்தது. யதார்த்தத்திலிருந்து விடுபடவே பல்வேறு எழுத்து முறைகள் குறிப்பிடத்தக்க வகைமைகளில் வடிவங்களில் எழுதப்பட்டன. அவை பழைய கதை சொல்லல் முறையை மீளுருவாக்கம் செய்து “ஆயிரத்தோரு இரவுகள்” சொன்னவர்களோடு, அமரந்தாவை விண்ணேகவிட்டவர்களுக்கு தொடர்ச்சியை நிறுவ முடிந்தது. ரேசன் கடையில் வரிசையில் மனிதர்கள் நின்றால் யதார்த்தவாதக் கதை.  அதே வரிசையில் பாட்டரிகள் நிரப்ப ரோபோக்கள் நின்றால் அறிவியல் புனைவு.  மீதி அந்த ரோபோட்டுகள் செய்வதும், மனிதர்கள் செய்வதும் ஃபான்டஸி மட்டுமே பிள்ளைகள் பெற்றுக் கொள்வது உட்பட.

இத்தொகுப்பில் உள்ள கதைகள் தேவைக்கும் அதிகமான காலம் வெளிவராமல் இருந்தவை. ”கனவு மிருகம்” எனும் கதை மிகச் சிறியது என்றாலும் இரண்டு வருடங்களாக மாற்றங்களுக்கு உட்பட்டு ஒருவழியாக கோணங்கியின் ”கல்குதிரை”யில் பிரசுரம் கண்டது.   பிரசுரமான முதல் கதை “ஆப்பிள்” விகடனில் வெளிவந்த ஆண்டு 2007.  இந்த ஐந்து வருடங்களில் மொத்தம் 7 கதைகள் மாத்திரமே அச்சைப் பார்த்தன.  ”கழிப்பறைக் குறிப்புகள்” எனும் பிரசுரமான சிறுகதையை இத்தொகுப்பில் சேர்க்கவில்லை.  மற்ற கதைகளோடு ஒப்பிடும் போது அது விளையாட்டுத்தனமாக எழுதப்பட்ட கதையாகப் படுவதாலும், அந்தக் கதை ஒருவேளை மற்ற கதைகளின் போக்கோடு ஒட்டாமல் தீவிரம் குறைந்து காணப்படும் என்பதாலும் அதைக் கைவிடவே விரும்புகிறேன். 

சோம்பல்தான் எழுதாமல் இருப்பதற்கு முதலும் அடிப்படையான காரணமாக இருந்தாலும் ஏற்கனவே எழுதப்பட்டுவிட்ட கதைகளைத் தாண்டி புதிதாகச் சொல்வதற்கு எழத முனைபவை அனைத்துமே தகுதியானவை ஆகிவிடுமா என்கிற சந்தேகமும் கூட.  முடிக்காமல் விடப்பட்ட கதைகளும், முழுக்க எழுதி “மறுசுழற்சி”க் கூடையிலிருந்தும் காணாமல் போய்விட்ட கதைகளும் உண்டு.  அவை கருக்கலைய சரியாக வராதது குறித்த சந்தேகமே பெரிதும் காரணம்.

இத்தருணத்தில் ”புதுவிசை” ஆசிரியர் ஆதவன் தீட்சண்யா, கோணங்கி, பா. வெங்கடேசன், ஆசிரியர் ஜெகந்நாதன், நண்பர் குணா ஆகியோருக்கு கதைகளின் பொருட்டும்,  யதேச்சையான சந்திப்பின் மூலம் எவ்வித வற்புறுத்தல்களும், சிபாரிசுகளும் இல்லாமல் மிக உவப்பான முறையில் இக்கதைகள் தொகுப்பாக வெளிவரக் காரணமான நண்பர் சரவணனுக்கும் நன்றி. 

Monday, December 10, 2012

நள்ளிரவுக் கோரிக்கை - 17


தெருநாய்களைக் கொல்லவே விரும்புகிறேன்
அப்படியே அந்தப் பிச்சைக்காரர்களையும்
சென்ட்ரல் இரயில் நிலையத்தில் அரசு ஆஸ்பத்திரி வாசலில்
குறிதெரிய படுத்திருக்கும் நோயாளிகளையும்
இயேசு விபாச்சாரியைத் தொட்டான் மாண்டவனை உயிர்ப்பித்தான்
தொழுநோயாளியை குணப்படுத்தினான்
இந்நகரம் ஒரு முழுநேர இயேசுவை எதிர்பார்த்து நிற்கிறது
குப்பைகளும் தூசியும் இல்லாத வீதிகளில்
குறிப்பாக முதல்வர் வசிக்கும் தெருவைப் போலவோ
ராஜ்பவன் முன்பிருக்கும் சாலையைப் போலவோ
சுத்தமான தெருவில் வசிக்கவே விரும்புவேன்
அங்கே நான் மட்டுமே குப்பையிடுவேன்
நான் மட்டுமே சிறுநீர் கழிப்பேன்
ஊனமுற்றவர்கள் இல்லாத உலகை
அடையாறு ஆற்றில் தோழிகளோடு படகோட்டும் நிலைமையை
நீங்களும் என்னைப்போல விரும்பவே செய்வீர்கள்
ஆனாலும் குப்பைகள் மிதக்கும் நகரத்தில்
மழைத்துளிகள்
பிளாஸ்டிக் உறைகளால் மூடப்பட்ட
காசநோயாளிகளின் நெஞ்சுச்சளியின் மீது விழுகின்றின
அடையாறு புற்றுநோயாளிகள் மருத்துவமனையில்
வாசலில் உணவருந்தும் பார்வையாளர்களின்  வடைகளில்
ஆனந்த பவன்களின் ருசி
கூவம் ஆற்றிற்கு வடக்கேதான் தலைமைச் செயலகம்
அது சாக்கடையைத் தாண்டித்தான் மீதிநிலத்தை ஆளவும் செய்கிறது
இந்தச் சூரியன் அழுக்கைக் காணவே எழுகிறது
அதன் பிரியம் அரசு ஆஸ்பத்திரியின் துர்நாற்றம் மிகுந்த குப்பையில்
வீசப்படும் கலைக்கப்பட்ட கருவாக இருக்கும்
ராபர்ட் கிளைவ் இங்கேதான் திரிந்தான்
பாரதியார் இங்கேதான் பார்த்தசாரதி கோயிலில் உண்டகட்டி வாங்கினான்
புதுமைப்பித்தன் திருநெல்வேலியில் ”இல்லாத”
விலைமாதர்களை மகாமசானத்தில் கண்ட நகரம் இதுதான்
எலெக்ட்ரிக் இரயில்கள் ஓடுகின்றன
இரண்டாம் விமான நிலையத்திற்கு அரசு திட்டமிடுகின்றது
குடிசை மாற்று வாரிய அபார்ட்மெண்டுகளில்
மோட்டர் வைத்து ஏற்றும் நீரில் அமிலம் கலந்திருக்கும்
மான்குட்டிகள் பன்றிகளோடு குப்பைகளை மேயும்
பக்கிம்ஹாம் கால்வாயில் மிதக்கும் மூட்டையின் மீது தூங்கும் ஆமை
மேலே ஓடும் பறக்கும் இரயில்
ஆகக் கேவலமான குடிசையில் வாழ்பவர்க்கும்
ஆக மகா வசீகரமான போட்கிளப் மாளிகைகளில் வாழ்பவர்க்கும்
சமமாக ஓடுகிறது கருணைமிக்க சாக்கடைப் பேராறு
உங்களைப் போலவே
விநாயகர் சதுர்த்தி அன்று அதே சாக்கடையில் சிலைகளைத் தூக்கிப் போடவும்
மீதி நாட்களில் மாதவிலக்குப் பெண்களின் நாப்கின்களைப் போடவும்
பாலங்களில் நின்று சிறுநீர் கழிக்கவும் விரும்புவேன்
மெரினாவில் பெசன்ட்நகரில் கொட்டிவாக்கத்தில்
பின்னரவுகளில் உடல்களைத் தேடியலையும் குடிசைவாசியும்
குளிர்க்கண்ணாடிகள் பதிக்கப்பட்ட கார்களில் அலைபவனும் புகைக்கும் கஞ்சாப் புகையில் இந்நகரம் தள்ளாடுகிறது
வடபழனி ஸ்டூடியோவில் அந்த நடிகை மேக்கப் போடுகிறாள்
அந்த நடிகன் கடமையின் பொருட்டு அவளைத் தழுவத் தயாராகிறான்
வெளிச்சம் வெளிச்சமாய் இரவின் மீது கொட்டுகின்றன விளக்குகள்

Wednesday, December 5, 2012


     நள்ளிரவுக் கோரிக்கை 16

            நீர்மம் இழந்த செவ்வாய்க்கிழமையில்
     டூப்ளிகேட்டுகளின் ராஜா இரண்டாம் முறையாக
     புதியவனாக மாறும் சபதமெடுத்தான்
     ஆலன் சோலி ஸ்டிக்கரை
     விலைகுறைவான காட்டன் காற்சட்டையில்
     தைத்து அலையத் துவங்கியதிலிருந்து துவங்கியது
     ப்ராண்டுகளை டூப்ளிகேட் செய்வது
பூமா காலுயர்த்தும் தொப்பியை
நேபாளத்திலிருந்து கள்ளச்சந்தையில் வந்த சரக்கென
அவன் நண்பன் விற்பதாகச் சொல்ல அதற்கு
காதலியிடம் பணம் வாங்கி அவள் அன்பைச் சோதித்தான்
ரீபோக் சூவில் 0வுக்கு பதிலாக a இருந்ததை
திறமையாக செப்பனிட்டு வடிவம் சிதைந்த 0வாக மாற்றினான்
கிறிஸ்டியானோ ரொனால்டோ முகம் பதிந்த
நைக் டீசர்ட்டில் ”ஸ்வூஷ்” குறி பக்கம் மாறியிருந்தது
சாலையில் நின்றிருந்த இருநபர்இருக்கை ஆடிகாரின் முன்நின்று
எடுத்துக் கொண்ட புகைப்படத்தில் அவன் அணிந்திருக்கும்
குளிர்கண்ணாடியின் ஏவியோட்டர் வடிவம் வெறும் நூறுரூபாய்
12000 ரூபாய் சம்பளம் உள்ளவர்களுக்கும்
கடனட்டை கிடைக்குமெனத் தெரிந்த ராஜா
மூன்று அட்டைகளை மொத்தம் அதிகபட்ச தொகை அளவு
75000 இருக்கும் வண்ணம் கிடைக்கப் பெற்றான்
அன்றுதான் தன்னை முதன்முறையாக புதியவனாக மாற்றும் சபதமெடுத்தான்
அன்றைக்கே வாங்கியதுதான் ஃபாஸ்ட்டிராக் வாட்சும்
அடிடாஸ் டீ சர்ட்டுகளும் யோனக்ஸ் மணிக்கட்டுப் பட்டைகளும்
கோல்ட் ஜிம்மில் ஆறுமாத சந்தா கட்டிச் சேர்ந்தான்
அதற்காக வாங்கிய சாக்சுகள் அனைத்தும் ஃபிலாவின் Fல் மேல்வரி சிவப்பான ஒரிஜினல்கள்
யுனைடெட் கலர்ஸ் ஆஃப் பெனட்டனில் அவனது காதலிக்கு
மேற்சட்டை வாங்கிக் கொடுத்தான்
கூடவே மைக்ரோமாக்ஸ் பிங்க் நிற செல்பேசியும்
அதன்பிறகு அவர்கள் மெய்ன்லாண்ட் சைனா உணவகத்தில்
உணவருந்திய தொகை அவன் சம்பளத்தில் 15%
அவன் காதலி வழக்கமாக கொடுக்கும் முத்தத்திற்கு அதிகமாக
அவனுக்குக் கொடுத்தாள்
முத்தத்தில் ஸ்ச்வான் பிரைட் ரைஸில் இருந்த கிங் பிரான்சின் வாசனை
ஆறு மாதங்கள் அங்குமிங்கும் திரட்டி
கடனட்டை பில்லைக் கட்டிய ராஜா
அதன்பிறகு மூன்று வங்கிக்காரர்களாலும் டிஃபால்டர் என அழைக்கப்பட்டான்
கடைசித் தவணையையும் கட்டிமுடிக்கும் போது
அடிடாஸ் டீசர்ட்டுகள் சாயமிழக்கத்துவங்கியிருந்தன
அவனது காதலி அதன்பிறகு காஃபிடேயின் கழிப்பறையில் வைத்து
வேறொருவனுக்கு கொடுத்த முத்தத்தில்
ஐஸ்கிரிமுடன் வழங்கப்படும் ப்ரெளனியின் வாசனை
இப்போது இரண்டாம் முறையும் புதியவனாகும் சபதமெடுத்த
டூப்ளிகேட்டுகளின் ராஜா
அடுத்தநாள் புதன்கிழமையில்
பற்பசைக்குப் பதிலாக செங்கற்பொடியைத் தேய்த்தான்
வீட்டிலிருந்த கடலைமாவில் முகம் கழுவினான்
மையெடுத்து கண்களைச் சுற்றி குளிர்கண்ணாடிபோல் வரைந்தான்
வெற்று மார்பில் X குறியை சிவப்புநிறத்தில் தீட்டினான்
நிர்வாணமாகத் தெருவில் இறங்கி நடந்தான்

Saturday, December 1, 2012

நள்ளிரவுக் கோரிக்கை 15



தடுமாறத் துவங்கிவிட்ட ஒழுங்கு
ஆண்டிகுவிட்டி ரேரின் அற்புத மஞ்சள் கலந்த பழுப்பு
வீதியெங்கம் பரவ
நினைவின் அடுக்கைக் குடைந்து
ஒரு பெண்ணை எடுக்கிறேன்
சற்று முன் உண்ட
தந்தூரிச் சிக்கனைப் போன்ற
மிதமான பக்குவத்தில் அவள் தேகம்
அவளுக்குப் பெயர் வைக்கிறேன்
அவளுக்கு முன்பே பெயர் இருந்தபோதும்
அவளை இங்கே உலவவிடுகிறேன்
அவள் பாதங்கள் வேறெங்கோ காலடி பதிக்கும்போதும்
அவளை முத்தமிடவும் தழுவவும் முனைகிறேன்
இரவின் மீதல்லவா சோடியம் வேப்பர் ஓவியம் வரைகிறது
இரவின் போதல்லவா வார்த்தைகளுக்கு இறக்கைகள் முளைக்கின்றன
எமினெம்மை ஒலிக்கவிட்டுச் செல்லும் ஸ்கோடா காரின்
நீல நிற வண்ணமும் ஒளியில் கரைகிறது
அந்த வீதி நெடுகச் செல்லும் வீதி
அவன் விதி சுருங்கச் சொன்னால் இன்னுமொரு விதி
காதுகளில் ஒலிக்கட்டுமே முத்தமிடும் உதடுகளின் சொற்கள்
கண்களில் படரட்டுமே கொடியேன நடமாடும் உடல்
ஊதாநிற டீசர்ட் அணிந்த அவள் அறைக்குக் கூட்டிப் போகிறாள்
வார்த்தைகளின்றி தடுமாறத் துவங்கிவிட்டன
காற்றில் இறகென மைதீட்டும் இலைகள்
துவந்தம் அசைவுறத் துவங்கிய கணத்தில்
ஓசைகள் கேட்கின்றன மரங்களின் கிளைகளில்
சற்றே சற்று முன்புதான் எஃஎம் ஒலித்து நின்றது
அறையில் உலவும் ஊதாநிற டீசர்ட் பெண்ணும்
ஜன்னல் வழிப்பரவும் குளிரில் கரைகிறாள்
ஆண்டிகுவிட்டி ரேருக்கு மீண்டுமொரு பெயர் சூட்டுகிறேன்
அதற்கு முன்பே ஒரு பெயர் இருந்தபோதும்
அதன் பழுப்பு நிறத்தை பருகத் தாவுகிறேன்
உறக்கம் உடலை இழுத்துச் செல்லும் ஆழத்தில்
ஊதாநிற டீசர்ட் அணிந்த பெண்
அவளைத் திரவமென மாற்றுகிறாள்
கோப்பையெனத் ததும்பத் தயாராகிவிட்டது இதயம்