Monday, October 8, 2012

சின்னஞ்சிறு கதை 2



கல்லூரியில் படிக்கும் போதிருந்து எனக்கு நெருக்கமான சிநேகிதியான கோகிலாவை நேற்று இரவு ஆஸ்பத்திரியில் சேர்த்திருப்பதாகவும் ஆனால் இன்னும் வலி உண்டாகவில்லை எனவும் எனக்கு அவளுடைய கணவரின் செல்போன் எண்ணிலிருந்து குறுஞ்செய்தி வந்தது.   நான் அப்போதும் அலுவலகத்தில் இருந்தேன். அவளுக்கு இது இரண்டாவது பிரசவம்.   முதல் பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்ததும் சிரித்துக் கொண்டே சொன்னாள்,

"
பேசின மாதிரி நான் ஒழுங்கா பையனைப் பெத்துட்டேன்.    நீ புள்ளையப் பெத்துக் குடு, ரெண்டுக்கும் கல்யாணம் பண்ணி வெச்சரலாம்" 

என் திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்து மிகுந்த மனத்துயரத்தில் இருந்த நேரங்களில் இரவில் வெகு நேரம் வரை என்னை ஆற்றுப் படுத்த பேசுவாள். நான் அந்த குறுஞ்செய்திக்கு இந்த விதமாக பதில் அனுப்பினேன்:   "நாளைக்கு செவ்வாய்க் கிழமை அம்மன் கோவில் செல்வேன். அவளுக்காக வேண்டிக் கொள்வேன்" 

நான் அவ்வாறே செய்தேன்.   "எனது பிரார்த்தனை இன்று உனக்காக மட்டும்தான்". கோவிலில் இருந்து வெளியே வந்ததும் அவளுடைய எண்ணுக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன்.   இந்த சமயத்தில் அவள் குறுஞ்செய்திகளை பார்க்க முடியாமல் இருந்தால் கூட பிரார்த்தனையை சரியான தருணத்தில் அனுப்பிவிட்ட மகிழ்ச்சி.

எங்கள் அலுவலகத்தில் செல்போன் உபயோகிக்கக் கூடாது.   ஹேண்ட் பேகில் வைத்துக் எடுத்து கொண்டு போய் கழிப்பறையில் குறுஞ்செய்திகள் அனுப்புவது வாடிக்கை. 

பதினோரு மணிக்கு ஒரு முறை பார்த்தேன் இன்னும் எந்த தகவலும் வரவில்லை. வேலைப்பளு காரணமாக மதிய நேர உணவையும் தவிர்த்து விட்டேன்.   ஏதோ ஒரு மின்னஞ்சலின் வருகைக்காக காத்திருக்கையில் சட்டென அவளுக்கு இந்நேரம் குழந்தை பிறந்திருக்க வேண்டுமென தோன்ற மீண்டும் ஒரு முறை கழிப்பறை சென்று அவள் மற்றும் அவள் கணவருடைய எண்களுக்கு "என்ன குழந்தை?" என்று குறுஞ்செய்தி அனுப்பினேன்.   10 நிமிடங்கள் வரை எந்தத் தகவலும் இல்லாததால் இருக்கைக்கு திரும்பினேன். 

மாலை.   கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து வரலாம் என வருகையாளர் அறைக்கு சென்றேன். கண்ணாடித் தடுப்புக்கு வெளியே சோடியம் வேப்பரின் ஒளியில் மரம் ஆடிக் கொண்டிருந்தது.   எனக்கென்னவோ அந்த மரம் மகிழ்ச்சியை கட்டுப்படுத்த முடியாமல் ஆடுவதாகப் பட்டது. 

வைப்ரேட் மோடில் வைத்திருந்த செல்போன் என் ஜீன்ஸ் பாக்கெட்டில் அதிரவும், இது அவள் குறித்துதான் இருக்கும் என நினைத்துக் கொண்டே எடுத்துப் பார்த்தேன். அவளுடைய எண்ணிலிருந்து குறுஞ்செய்தி வந்திருந்தது.   மீண்டும் மீண்டும் படித்தாலும் நம்ப முடியாத குறுஞ்செய்தி "9.30 மணிக்கு குழந்தை பிறந்தது.   குழந்தை பிறந்தும் இரத்தப் போக்கு நிற்காததால் 11.30 மணிக்கு கோகிலா இறந்து விட்டாள்".

என்ன செய்வது எனத் தெரியாமல், எவ்வித எண்ணங்களும் எழாமல் நான் அந்த மரத்தைப் பார்த்தேன், எனக்கென்னவோ அது இன்னும் மகிழ்ச்சியாக இருப்பதாகவே தோன்றியதுதான், அந்தக் கணத்தின் உறைவை உடைத்த முதல் எண்ணம் என்பதை, நான் அவளுடைய முதலாம் நினைவு நாளான இன்றும் சரியாக நினைவு கூற முடிகிறது.



1 comment:

Anonymous said...

Koki ma... ;(

Thnks for the story...