Wednesday, August 25, 2010

இரத்தத்தின் அளவு

வாசித்துக் கொண்டிருக்கும் ”Wonders of Numbers"ல் பின்வரும் கேள்வி ஒன்றும் அதற்கான விடையும் அளிக்கப்பட்டிருந்தது.

கேள்வி :
பூமியில் வாழும் மொத்த மனிதர்களின் உடலில் உள்ள இரத்தத்தையும் கொள்ள என்ன அளவுள்ள கண்டெய்னர் தேவைப்படும்?

இதே மாதிரி எண்ணற்ற கேள்விகளை தொடர்ச்சியாக எழுப்ப முடியும்.  பத்து கேள்விகள் நான் யோசித்தவை:

1. பூமியில் வாழும் மொத்த உயிரினங்களின் எடை எவ்வளவு?
2. தாவர ராசிகள் தளைக்க தினமும் தேவைப்படும் தண்ணீரின் அளவு என்ன?
3. நேற்று சென்னையில் 20 கிலோமீட்டர் வேகத்தில் வீசிய காற்று லாவோஸ்   நகரை அடையும் போது என்ன வேகத்தில் வீசும்?
4. ஒரு நாளில் எத்தனை முறை சூரியன் உதிப்பதும் மறைவதும் நிகழ்கிறது?
5. மொத்த உயிரினங்களின் கால்களின் எண்ணிக்கை எவ்வளவு?
6.  100 கிலோமீட்டர் பயணத்தின் துவக்கத்தில் நம் தலைக்கு மேலே இருக்கும் நட்சத்திரத்திற்கும் பயண முடிவில் உள்ள நடசத்திரத்திற்கும் உள்ள தொலைவு என்ன?
7. அமேசான், நைல், பிரம்மபுத்திரா நதிகளில் இதுவரை வழிந்த தண்ணீரின் அளவு என்ன?
8. மனிதர்கள் ஒரு நாளில் பேசும் சப்தத்தின் அளவு என்ன?
9. அளவிடமுடியாதவற்றின் அலகு எது?
10. தொடர்ந்து மழையும், நதிக்கலப்பும் இல்லாத போது உலகின் கடல் நீர் இன்றிலிருந்து குறையத் துவங்கினால் முழுதும் வற்ற எவ்வளவு வருடங்களாகும்?

    மேற்கண்ட 10 கேள்விகளையும் யோசிக்க எனக்கு 16 நிமிடங்கள் தேவைப்பட்டன.  பதில் அறிந்து கொள்ள எவ்வளவு நாட்களாகும் என்பதை உறுதியாக சொல்ல முடியாததைப் போலவே இந்தக் கேள்விகளுக்கு பதில்களை அடைய முடியுமா என்பதும் உறுதியாகச் சொல்ல முடியாது. Google  உதவினால் உண்டு.  மற்றபடி நமக்கு கணிதமும், அறிவியலும் போதிக்கும் ஆசிரிய, பேராசிரிய, டாக்டரேட்களிடம் கேட்கலாம் என்றால் நாம் அவர்களுக்கு நிஜமாகவே மூளை இருப்பதை ஒத்துக் கொண்ட பிறகுதான் கேட்கவேண்டும். நான் ஒத்துக் கொள்ள தயாரில்லை.

புத்தகத்தில் கேட்கப்பட்டு கொடுக்கப்பட்ட கேள்விக்கான விடை:

ஒரு சராசரி வயது வந்த ஆணின் உடலில் உள்ள இரத்ததின் அளவு 5 - 6 லிட்டர் ( 1 காலன் = 3.79 லிட்டர் (US)  = 4.54 லிட்டர் (UK) )  (காலன் =  Gallon)

இந்தப் புத்தகம் Oxford University Press பதிப்பித்ததாலும், வருகிற விடையை வைத்தும் இப்புத்த ஆசிரியர் UK அளவையே எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.

6 பில்லியன் (600 கோடி) மனிதர்கள் இப்பூமியில் இருப்பதாக கணக்கிட்டால்
மொத்தம் ஏறக்குறைய 6 பில்லியன் காலன்.  (600,00,00,000 காலன்)

ஒரு கன அடி = 7.48 காலன் .  ஆக

80 கோடி கன அடி மனித இரத்தம்.(1 கன அடி = 33.96 லிட்டர்)

80,00,00,000 * 33.96  = 2716,80,00,000 லிட்டர் மனித இரத்த அளவு

1000 அடி நீளமும் 1400 அடி உயரமும் உள்ள கண்டெய்னரில் மொத்த இரத்தத்தையும் நிரப்பி விட முடியும் என புத்தகம் சொல்கிறது. எப்படி என்பதை கணக்கிட்டுக் கொள்ளவும்.

No comments: